×

பரமக்குடி, கமுதி பகுதிகளில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அமர்க்களம்

 

பரமக்குடி/ கமுதி, மே 6: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 30 ந் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதையொட்டி பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு பச்சை வண்ணப் பட்டு உடுத்தி, வெள்ளிக் கிண்ணத்தில் தயிர் சாதம் சாப்பிட்டு பூப்பல்லக்கில் எழுந்தருளி ஏராளமான தீவட்டி வெளிச்சத்தில் வண்ண வண்ணக் கலர் வேட்டுகள் முழங்க அதிகாலை 3:50 மணிக்கு கொட்டும் மழையில்வைகை ஆற்றில் இறங்கினார். பின்பு வைகை ஆற்றில் இருந்து தல்லாகுளம் புறப்பட்டுச் சென்றார்.

அங்கிருந்து காலை 9:15 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் பீச்சாங் குழல் மூலம் புனிதமான மஞ்சள் நீரை கள்ளழகர் மீது பீய்ச்சினர். பின்பு கள்ளழகர் தல்லாகுளத்தில் இருந்து மேலசத்திரம், காட்டுப் பரமக்குடி, மஞ்சள் பட்டிணம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். பின்பு மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு நகராட்சி, பெரிய கடை பஜார், காந்திசிலை வழியாக இரவில் வண்டியூர் என்னும் காக்கா தோப்பை வந்தடைவார்..

அங்கு பதினெட்டாம் படி கருப்பண சுவாமிக்கு காட்சி அளித்து விட்டு மண்டபத்திற்கு செல்வார். அப்போது அவருக்கு மஞ்சள் காப்பு சாற்றும் நிகழ்வு நடைபெறும். முன்னதாக ஆற்றுப் பாலம் பகுதியில் இருந்து மின் விளக்குகளால் இருந்த ஆயிரம் பொன் சப்பரத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து வைகை ஆற்றில் இழுத்து வருவார்கள். கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் தெற்குதெரு பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் அப்பகுதி மக்கள் ஏராள மானோர் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். தினமும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கரகாட்டம் போன்றவை நடைபெற்றது. பின்பு கடந்த 3 நாட்களாக தெற்குதெரு பகுதி முழுவதும், குதிரை வாகனத்தில் அழகர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post பரமக்குடி, கமுதி பகுதிகளில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அமர்க்களம் appeared first on Dinakaran.

Tags : Amarkalam ,Alaghar river ,Paramakkudy ,Kamudi ,Paramakkudi ,Paramakkudi Sundararaja Perumal Temple Chitrai Festival ,Amarakalam ,Alagar River ,Dinakaran ,
× RELATED மலைக்கு புறப்பட்டார் அழகர்